மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா: வீதிகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா, கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி கப்பரை திருவிழா பக்தி பரவசத்துடன் நேற்று நடைபெற்றது. ஆலய பூசாரி மோகன்,அக்னி கப்பரையை கையில் ஏந்தி,ஆலய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதியுலா வந்தார்.



அப்போது,வீதிகள் தோறும் பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பு தீபாராதனை எடுத்து,அக்னி கப்பரையை பக்தியுடன் வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து,மகா மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும்,இளைஞர்களின் உற்சாகமான கோலாட்ட நிகழ்ச்சிகளும், வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. திருவிழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா,வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


