தென்னை சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை, டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை மரங்களைப் பெருமளவில் பாதிக்கும் ‘ருக்கோஸ் சுருள் வெள்ளை ஈ’ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயிர் பாதுகாப்பு இயக்கக இயக்குனர் டாக்டர் மூ.சாந்தி, வெள்ளை ஈக்களின் தாக்கம், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிரியல் காரணிகளைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, மஞ்சள் ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்த பேராசிரியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், வயலில் இயற்கையாகக் காணப்படும் ‘ என்கார்ஷியா ஒட்டுண்ணி’ எண்ணிக்கையைப் பெருக்க தோட்டத்தில் ஆங்காங்கே வாழை, கல்வாழை அல்லது சீத்தா மரங்களை நட வேண்டும். இவற்றுடன், வெள்ளை ஈக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் முட்டைகளை அழிக்கும் இரைவிழுங்கிகளான ‘கண்ணாடி இறக்கைப் பூச்சிகளின்’ முட்டைகளை ஹெக்டேருக்கு 1,000 வீதம் வயலில் விட்டு இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த உயிரியல் காரணிகள் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், கண்ணாடி இறக்கைப் பூச்சியின் 1,000 முட்டைகள் கொண்ட தொகுப்பு 450 ரூபாய்க்கும், என்கார்ஷியா ஒட்டுண்ணி இலைகள் 10 ரூபாய்க்கும் கிடைப்பதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். தேவைப்படும் விவசாயிகள் 94425 62567 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம், எனவும் 20 முதல் 30 விவசாயிகள் இணைந்து கூட்டாகக் கேட்டால், அவர்களின் இடத்திற்கே நேரடியாகக் கொண்டு வந்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


