விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி
விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி நடக்கிறது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு விமர்சனம்.
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியானர்கள் சந்திப்பில் கூறியதாவது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று சுமார் 75 நாட்கள் கடந்துள்ள நிலையில், என்ன நடந்துள்ளது என்பது மக்களுக்கே தெரியாத நிலை உள்ளது.
சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், மின்வெட்டு, லாக்கப் மரணங்கள், பயிர்க் கடன் தள்ளுபடி, டெல்டா மாவட்ட வறட்சி, மேகதாது அணை விவகாரம், இருமொழிக் கொள்கை, 150 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மாநிலக் கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வு காணவில்லை.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டும் பிரச்சினைகளையும் அரசு பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
சிறிய தவறு நடந்துள்ளது; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற ஒரே பதிலுடன் அரசு கடந்து செல்கிறது.
அதே நேரத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் , அவர் செய்யாத செயல்களையும் செய்ததாக காட்டும் வகையில் போலி வீடியோக்கள் (Fake Videos), ரீல்ஸ் ஆகியவை பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுவதாகவும், இதற்காக இன்ப்ளூயன்சர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது
இதுகுறித்து மத்திய அரசு மற்றும் உளவுத்துறைகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பின்னணி அல்லது போராட்ட வரலாறு இல்லாத விஜய், சமூக வலைதள பிரசாரங்கள் மற்றும் ரீல்ஸ் மூலம் மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வந்தார். இதே உத்தியை 2029 தேர்தலிலும் பயன்படுத்த முயற்சி நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய் தினமும் நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குச் செல்லும் போது, கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நீண்ட நேரம் அவதிப்படுவதாகவும், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் காவல் நிலையங்களின் அன்றாடப் பணிகளும் பாதிக்கப்படுகிறது.
மேலும், ராஜினாமா செய்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார்கள். விஜய் நடித்த ஜனநாயக திரைப்படத்தின் டிக்கெட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்பவர்களுக்கு மீண்டும் தேர்தல் சீட்டு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பழனி கோயில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திட்டமிட்ட வகையில் அதிகாரிகள் மாற்றப்பட்டதாகவும், பின்னர் உயர்நீதிமன்றம் அந்த பதிவு நடவடிக்கையை ரத்து செய்தது.
இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், சிபிசிஐடி அல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இறுதியாக, சமூக வலைதளங்களில் விஜயின் போலி வீடியோக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகளை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் இதை எச்சரிக்கையாக கூறுகிறேன்.


