in

மதுரையில் தவெக சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் தவெக சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மதுரை தெற்கு தொகுதி தவெக 42-வது வார்டு சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு, குப்பையில்லா மதுரை மற்றும் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை தெப்பக்குளம் சாலை முதல் முனிச்சாலை 42-வது வார்டு பகுதி வரை நடைபெற்ற இந்தப் பேரணியை, சட்டமன்ற உறுப்பினருக்கான தலைமை நிர்வாகி அருண் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 42-வது வார்டு வட்டச் செயலாளர் விக்னேஷ் குமார் பேரணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பேரணியில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் “போதைப் பொருட்களை ஒழிப்போம்; குப்பையில்லா மதுரையை உருவாக்குவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்; போக்குவரத்து சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவோம்” என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமதர்மராஜா மற்றும் சித்ரகுப்தன் வேடமணிந்த கலைஞர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். “சாலை விதிகளை மதிப்போம்… உயிர்களை காப்போம்” என்ற கருத்தை வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு குறித்த தெருமுனை விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் நிலை, அதனால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை தத்ரூபமாக எடுத்துரைக்கப்பட்டன.

போதைப் பொருள் பயன்பாட்டால் உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், குற்றச் செயல்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாடகத்தின் மூலம் கலைஞர்கள் விளக்கினர். “போதைக்கு அடிமையாகாதீர்; போதைப் பொருளை ஒழிப்போம்; இளைஞர்களை பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு கருத்துகளும் வலியுறுத்தப்பட்டன.

பேரணியில் காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், பெரியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட தலைவர்களின் தோற்றத்தில் வேடமணிந்த கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.

வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

What do you think?

மக்களை பாதிக்கும் தொழிற்சாலை அமைக்கக் கூடாது; காஞ்சிபுரம் ஆட்சியரிடம் பால்நல்லூர் ஊராட்சி தலைவர் மனு

திருப்பதி மலையில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி கருட வாகன புறப்பாடு