ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றம் சொக்கப்பனை திருவிழாவு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க திருக்கார்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் – நவம்பர் 24-ஆம் தேதி ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றம்; சொக்கப்பனை திருவிழாவுக்கு ஏற்பாடு.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று காலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்கநாதப் பெருமான் 64 திருவிளையாடல்களைப் புரிந்த புராதனமான புண்ணியத் தலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருக்கோயிலில் ஆண்டின் 365 நாட்களும் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் நடைபெற்று வருவது சிறப்பம்சமாகும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை சுவாமி சன்னதி அருகே அமைந்துள்ள தங்கக் கொடிமரப் பகுதியில் கொடியேற்ற விழா நடைபெற்றது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் மகர லக்கினத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் ஒலிக்க திருக்கார்த்திகை உற்சவக் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளனர்.

திருக்கார்த்திகை திருநாளான நவம்பர் 24-ஆம் தேதி கோயில் முழுவதும் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. இதையொட்டி, அன்று மாலை 7 மணியளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதிக்குச் செல்ல உள்ளனர்.
அங்கு அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகே உள்ள பூக்கடை தெருவிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும், இந்த இரண்டு இடங்களிலும் சொக்கப்பனை ஏற்றப்படும் என்றும், உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வாகைக்கிடில் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருக்கார்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களும் நடைபெற உள்ள சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதி உலா மற்றும் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


