சாதிய வன்மத்தோடு வேலி அமைக்க முயற்சி
நாகை அருகே கோவில்பத்து கிராமத்தில் குளம் இருக்கும் இடத்தில் கோவில்; கோவில் அருகே தலித் மக்கள் பயன்படுத்தி வரும் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை கட்டிடம்; தலித் மக்கள் பயன்படுத்த கூடாது என சாதிய வன்மத்தோடு வேலி அமைக்க முயற்சிக்கும் தனி நபர்கள்;
போலிஸ் பாதுகாப்போடு அளவீடு செய்து வேலி அமைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு குறித்த செய்தி தொகுப்பு:
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவில்பத்து கிராமம் தெற்கு தெருவில் சுமார் 200 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அருள்மிகு எனையாளும் கண்ணபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள காலி இடத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் அமைக்கப் பெற்றுள்ள விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.
அந்த விளையாட்டு மைதானத்தில் மின்னொளி வாலிபால் கோர்ட் உள்ளது. அருகில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் அமைந்துள்ளது. மேலும் காலியாக உள்ள இடத்தில் பொங்கல் விழா உள்ளிட்ட விழாக்காளை கொண்டாடவும் அந்த இடத்தை ஆண்டாண்டு காலமாக தலித் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தை தலித் மக்கள் பயன்படுத்த கூடாது என்ற நோக்கில் சாதிய வன்மத்தோடு அதே ஊரைச் சேர்ந்த சில தனி நபர்கள் நீதிமன்றத்தில் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் அதனை சுற்றி காம்பவுண்ட் சுவர் வைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நீதிமன்றம் அந்த இடத்தை அளந்து வேலி வைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த இடத்தை அளந்து வேலி வைப்பதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 100 க்கும் மேற்பட்ட போலிஸ் பாதுகாப்போடு அளந்து வேலி வைக்க அதிகாரிகள் வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் இந்த இடத்தில் அரசே விளையாட்டு மைதானமும், கழிப்பறையும் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறி இதை வேலி வைத்து அடைக்க கூடாது எனக் கூறி முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது நீதிமன்ற உத்தரவுப் படி இடத்தை அளந்த போது கோவில் இருக்கும் இடம் அரசுக் சொந்தமான குளம் என தெரிய வந்தது. மேலும் விளையாட்டு மைதானம் , கழிப்பறை கட்டிடம் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் எனவும் தெரிய வந்தது.
இதனையடுத்து நீதிமன்றம் வேலி அமைக்க உத்தரவு அளித்த இடம் எண் தவறாக இருந்ததால் அதிகாரிகள் வேலி வைக்காமல் திரும்பி சென்றனர்.
. இது குறித்து கிராம மக்கள் கூறிய போது அந்த இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தலித் இளைஞர்கள் பயன்படுத்துவதாலும், அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தோடு அதே ஊரில் உள்ள சிலர் சாதிய வன்மத்தோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் கோவிலுக்கு என தனி காம்பவுண்ட் சுவர் ஏற்கனவே அமைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கு தாங்களும் வீட்டிற்கு 2000 ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்போது காலியாக உள்ள இடம் எந்த விதத்திலும் கோவிலுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதாக கூறிய அவர்கள் ஆண்டாண்டு காலமாக விளையாட்டு மற்றும் விழாவிற்கு தாங்கள் பயன்படுத்தி இடத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலித் மக்கள் பயன்படுத்த கூடாது என்பதற்காகவே விளையாட்டு மைதானத்தை வேலி வைத்து அடைக்க சிலர் முயற்சி செய்ய நினைப்பதால் ஒற்றுமையாக இருக்கும் ஊரில் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


