திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்!
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கும், தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை அம்மனுக்கும் காப்பு கட்டப்பட்டது. இதையடுத்து சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர்.
காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள், திருவிழா நடைபெறும் ஏழு நாட்களிலும் கோவிலின் மண்டபங்களில் தங்கியிருந்து கடுமையான விரதத்தை மேற்கொள்வார்கள். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு தேன் மற்றும் சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு, இரவில் பால் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும், தினமும் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11 மணி மற்றும் மாலை 5 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 14-ஆம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 15-ஆம் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெறுகின்றன. தொடர்ந்து 16-ஆம் தேதி காலை சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி, ரத வீதிகள் மற்றும் கிரிவீதியில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பால், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்த தினை மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சஷ்டி மண்டபத்தில் தினமும் அன்னதானமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் பூஜைகளை நேரடியாகக் காணும் வகையில் கோவில் வளாகத்தில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், மாநகராட்சி சார்பில் கிரிவலப் பாதைகளில் குடிநீர் வசதி மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சரவணப் பொய்கை பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.


