அகரஅன்னவாசல் வீரமா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே அகரஅன்னவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த வீரமா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அகரஅன்னவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக தினமான இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகாபூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது.
மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து, விமான கும்பத்தை அடைந்து, கோபுர கலசத்தில் புனிதநீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


