in

2 டன் பீடி இலைகள் லாரியுடன் பறிமுதல்

2 டன் பீடி இலைகள் லாரியுடன் பறிமுதல்

 

சாயல்குடி அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலைகள் லாரியுடன் பறிமுதல் – டிரைவர் கைது; தப்பியோடிய கும்பலுக்கு வலை!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வேலாயுதபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 57 மூட்டைகளில் வைத்திருந்த 2 டன் பீடி இலைகளை லாரியுடன் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

​ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல்வழியாகத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவது சமீபகாலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாயல்குடியை அடுத்த வேலாயுதபுரம் கடற்கரைப் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று சட்டவிரோதமாகப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

​இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி காவல் துறையினர், அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பலை அதிரடியாகச் சுற்றிவளைத்தனர். போலீசாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த கும்பலைச் சேர்ந்த 7-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து தப்பியோடினர்.

​எனினும், போலீசாரின் இந்த அதிரடி வேட்டையில், சாயல்குடி அடுத்த கொக்கரசன் கோட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ‘கொள்ளைகொண்டான்’ என்பவர் கையும் களவுமாகச் சிக்கினார். அவரைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும், அதில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 57 மூட்டைகளில் வைத்திருந்த 2 டன் பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டது தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள கார்த்திஸ்வரண் மற்றும் தப்பியோடிய 7 பேரைத் தீவிரமாகத் தேடும் வேட்டையைப் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். சாயல்குடி அருகே கடற்கரைப் பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்