80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் மீது தாக்குதல்; சவ ஊர்வலத்தில் பதற்றம்
சவ ஊர்வலத்தை கடக்க முயன்ற நான்குசக்கர வாகனத்தில் பயணித்த 80 வயது மூதாட்டி உள்ளிட்ட 4 பெண்கள் உள்பட 5 பேர் மீது கொடூர தாக்குதல்.
கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி 50-க்கு மேற்பட்ட கும்பல் கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு மேலவீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் தாயார் பவுன்மதி என்ற 80 வயது மூதாட்டியை, மூர்த்தியின் மனைவி அருண்மொழி(50) தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளார். அருண்மொழியுடன் மூர்த்தியின் தம்பி மனைவி தேவி, தேவியின் மகள் லோஷினி(22), மூர்த்தியின் மகன்; சபரிஷ் அகோரம் ஆகியோர் சைலோ காரில் சென்றுள்ளனர்.
சபரிஷ் அகோரம் காரை ஓட்டிச்சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது,குத்தாலம் அருகே கடலங்குடியில் எதிரே சவ ஊர்வலம் வந்தபோது, அதனை கடக்க முயன்றபோது, அங்கு போதையில் ஆடிக் கொண்டிருந்தவர்கள் காரை பிடித்து உலுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களுடன் வந்ததால் பயந்துபோன சபரிஷ் அகோரம்; காரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, போதை ஆசாமி ஒருவர், காரின் மேற்கூறையின் மீது ஏறி காரை நிறுத்த சொல்லி மிரட்டி உள்ளார்.
வேறு வழியின்றி காரை நிறுத்தியவுடன், சபரிஷ் அகோரத்தை தாக்கியுள்ளனர். தொடர்ந்து சவ ஊர்வலத்தில் பங்கேற்ற 50-க்கு மேற்பட்டோர் காரின் அனைத்து கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினார். மேலும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மூதாட்டி பவுன்மதியை கண்ணில் தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி காரில் அமர்ந்திருந்த இளம்பெண் லோஷினியை கையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர்.
மேலும், தேவியை முடியை பிடித்து இழுத்து தாக்கியும் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கஞ்சா போதையில் 50-க்கும் மேற்பட்டோர் பெண் என்றும் பாராமல் காரில் வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தங்கள் பகுதியில் பாதுகாப்பே இல்லை என்றும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்தனர். சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

