புதுச்சேரி விமான நிலையத்திற்கு முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வருகை..
புதுச்சேரி விமான நிலையத்தில் முனையக் கட்டிடத்தின் வருகை மண்டபத்தில் இன்று காலை விமான நிறுவன ஊழியர்கள், காவல்துறை மற்றும் பிற விமான நிலைய பணியாளர்கள் உள்ளிட்ட இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் இணைந்து “வந்தே மாதரம்” என்ற தேசியப் பாடலைப் பாடினார்கள்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பாரம்பரிய திலகம் மற்றும் ரோஜா பூக்களை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்டில் பயணிகளும் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
புதுச்சேரி விமான நிலையம் 1989ம் ஆண்டு திறக்கப்பட்டு, 37 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகள் விமான வருகையின்றி மூடப்பட்டிருந்தது. தற்போது 1,500 மீட்டர் ஓடுபாதை மட்டுமே உள்ளதால், 72 பேர் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே வந்து செல்கின்றன.
போர் பதட்டம் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்வால், பெங்களூரு, ஹைதராபாத்திற்கு இயங்கி வந்த 3 விமானங்களில் ஒரு விமானம் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
இருப்பினும் கடந்த 2025-2026ம் நிதி ஆண்டில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வந்துள்ளனர் என இயக்குனர் ராஜசேகர ரெட்டி தெரிவித்தார்.
விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்தால் 200க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் பெரிய ரக விமானங்கள் வரும். பல மாநிலங்களுக்கு விமான சேவையும் விரிவடையும். இதன் மூலம் அதிகளவு வருவாய் விமான நிலையத்திற்கு கிடைக்கும்.வரும் 2027ம் ஆண்டு விரிவாக்க பணி தொடங்கி 2030ம் ஆண்டில் 2,300 மீட்டர் புதிய விமான ஓடுபாதை பயன்பாட்டிற்கு வரும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.


