ராமாபுரம் பகுதியில் மின்தடை பிரச்சனை: தெருவில் திரண்ட பொதுமக்கள்
லோ வோல்டேஜ் மற்றும் தொடர் மின்வெட்டால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைவதாக புகார்
ராமாபுரத்தில் இரண்டு வாரங்களாக தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனை இருப்பதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சாலையில் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சென்னை ராமாபுரம் ஆண்டாள் நகர் பாரதியார் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக நள்ளிரவில் நீடிக்கும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த குறைபாடு காரணமாக, அப்பகுதி பொதுமக்கள் சாலையில் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
20, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய மின் உள்கட்டமைப்பை மாற்றாததே இந்தத் திடீர் மின்தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கும் குடியிருப்பு வாசிகள், இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் முறையான பதில் கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி வாசிகள், “தினமும் நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பகல் நேரத்தில் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
லோ வோல்டேஜ் பிரச்சனையால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் சாதனங்கள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் புகார் அளித்தால் ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி காலம் தாழ்த்துகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாள் நகர் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.


