in ,

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகல தொடக்கம்!

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகல தொடக்கம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 15 நாட்கள் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பு கொண்டுவரப்பட்டார்.

தொடர்ந்து கொடிப்பட்டம் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கொடிமரம் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பஞ்சவாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கம்பா நதியில் தவமிருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வரும் 5ஆம் தேதி மதியம் நடைபெறுகிறது. கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் வரும் 6ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பொத்தனூர் பச்சை மலை கிரிவலப் பாதையில் உழவாரப்பணி

ஐப்பசி மாத அன்ன அபிஷேக அலங்காரம்