பழனி புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கோலாகலம்
பழனி புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கோலாகலம்: 3-ம் நாள் உற்சவத்தில் சுந்தர நாட்டிய நிகழ்ச்சி! திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் வழிபாடு; அன்னதானம் வழங்கல்!
பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் தசரா விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று போகர் பழனி ஆதீனம் 13-ஆம் பட்டம், துர்கா பீடாதிபதி சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தேவதா மரியாதையுடன் மலைக்கோயிலுக்குச் சென்று, போகர் நிர்விகல்ப சமாதியில் வழிபாடுகள் நடத்தப்பட்டு, ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்குக் காப்புக் கட்டப்பட்டது.
அங்கிருந்து அம்மன் ஆசிரமத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, நாள்தோறும் நவதுர்கை வடிவங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான இன்று, ஆசிரம நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சுந்தர நாட்டிய கேந்திரா குரு கலாரத்தனா சுந்தரமூர்த்தி குழுவினரின் ஆன்மிக சுந்தர நாட்டிய நிகழ்ச்சி கலைநயத்துடன் அரங்கேறியது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

இவ்விழாவில் துர்கா பீடாதிபதி சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், இளைய பட்டம் செல்வநாதன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி செந்தில், ஆசிரம மருத்துவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் வளாகத்தில் அம்பு எய்தல் மற்றும் வன்னிகா சூரவதம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

