வள்ளலாரின் 203-வது அவதார திருநாள் விழா
ஓசூரில் கோலாகலமாக நடைபெற்ற வள்ளலாரின் 203-வது அவதார திருநாள் விழா: சமூக சேவகர்களுக்கு ஜீவகாருண்ய விருதுகள் வழங்கி கௌரவிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அருட்பிரகாச வள்ளலாரின் 203-வது அவதார திருநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆன்மீகப் பெரியோர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், சிறந்த சமூக சேவகர்களுக்கு ஜீவகாருண்ய விருதுகள் வழங்கப்பட்டன.
இன்று அக்டோபர் 5 ம் தேதி வள்ளலாரின் பிறந்தநாள் அனைத்து ஆன்மீக அன்பர்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
19-ஆம் நூற்றாண்டில் தோன்றி மனித குலத்திற்கு அன்பைப் போதித்த வடலூர் வள்ளல் பெருமான், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய, அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாள், அவரது 203-வது “வருவிக்க உற்ற விழாவாக” கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஓசூர் ‘வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை’ சார்பில், தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஆன்மீகப் பெரியோர்களான, கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் குரு மகா சன்னிதானம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பொள்ளாச்சி தத்துவ ஞான சபை ஆச்சாரியார் பூஜ்ஜியஸ்ரீ வேதாந்த சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷவலிங்கத் தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு பாரம்பரிய முறைப்படி மங்கள வாத்தியங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழாவில் பக்திப் பரவசமூட்டும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. சிறுவர், சிறுமியர் பக்திப் பாடல்களுக்கு ஏற்றவாறு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆடிய கோலாட்டம், கரகாட்டம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
பின்னர், விழாவிற்கு வருகை தந்திருந்த துறவியர்கள் மேடையில் முறைப்படி குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய சாமியார்கள், ஜோதி இராமலிங்க அடிகளாரின் பெருமைகள் மற்றும் அவரது உபதேசங்கள் குறித்து விரிவாகப் பேசினர். குறிப்பாக, அனைத்து உயிர்களிடமும் பாகுபாடின்றி அன்பு செலுத்தும் ‘ஜீவகாருண்ய’ நெறியைக் கடைப்பிடிப்பதன் மூலம், மனித குலம் நிரந்தர ஆனந்தத்தைப் பெற்று உய்வடைய முடியும் என்பதை வள்ளலாரின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி வெகுவாக எடுத்துரைத்தனர்.
இந்த விழாவின் முத்தாய்ப்பாக, சமூகத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு நற்பணிகளை ஆற்றி, சேவைகளின் மூலம் சாதனைகள் புரிந்த சிறந்த சமூக சேவகர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர். அவர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் விதமாக, துறவியர்களின் திருக்கரங்களால் அவர்களுக்கு “ஜீவகாருண்ய விருதுகள்” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆன்மீகமும், சமூக பொறுப்புணர்வும் ஒருங்கே இணைந்த இந்த 203-வது அவதார திருநாள் விழா, ஓசூர் பகுதி மக்களிடையே பெரும் எழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.