பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம். தேடும் பணி தீவிரம் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு..
புவனகிரி, ஜூன் 6 : பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(28), மனோகர் (27) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நாகவேல்(40) ஆகிய 3 பேரும் கடந்த 3ஆம் தேதி மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்திலிருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
மீன் பிடிக்க சென்றவர்கள் 4 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் படகு மூலம் கடலில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் மீனவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கடலூரில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாயமான மீனவர்கள் கிடைக்காததால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் இன்று காலை அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


