புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலய கும்பாபிஷேக பூர்வாங்க பணிகள் பாலாயணத்துடன் தொடங்கியது
புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் காலை பாலாயண நிகழ்வுடன் தொடங்கின.
இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், விக்னேஷ் கண்ணன் எம்எல்ஏ உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் கட்டிட பராமரிப்பு, வண்ணம் தீட்டுதல், தங்க முலாம் பூசப்பட்ட மேற்கூரை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த திருப்பணிகளை சுமார் 10 மாதங்களுக்குள் நிறைவு செய்ய கோவில் நிர்வாகமும் இந்து அறநிலைத்துறையும் திட்டமிட்டுள்ளன.
திருப்பணிகள் நடைபெறும் காலத்திலும் தினசரி வழிபாடுகள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பூஜை ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள் கணேஷ், நாகராஜ், சீனு ஆகியோர் மேற்கொண்டனர்.


