நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் பணியாளர் பலி
தஞ்சை அருகே இன்று பரபரப்பு திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் பணியாளர் பலி ற்றொரு பெண் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி.
தஞ்சாவூர் அருகே உள்ள ஆர். சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். தற்போது ஏராளமான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த குடோனில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் இன்று பணி புரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல் மூட்டைகள் சரசரவென சரிந்து விழத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வேக வேகமாக ஓட தொடங்கினர்.
இருந்தாலும் அதை கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு( வயது 51), சகுந்தலா ஆகியோர் மீது நெல் மூட்டைகள் விழுந்தது. இதில் சின்னப்பொண்ணு மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் .
சகுந்தலாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சகப்பணியாளர்கள் காயமடைந்த சகுந்தலாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெல் மூட்டைகள் விழுந்து பலியான சின்ன பொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தது எப்படி ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


