கும்பகோணம்: 100 நாள் வேலையை 200 நாளாக்கி ரூ.700 ஊதியம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் திருமலை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “வி பி கிராம் ஜி சட்டத்தை அமல்படுத்துவது என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்தி வேலை அட்டையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும், “கும்பகோணம் கோட்ட அளவில் 53 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் அழிந்து போகும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு நெல்லை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தனர்.


