in

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்


Watch – YouTube Click

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான் என பரபரப்பு பேச்சு.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரகாசன் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு கேட்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் செய்தார்.

சிதம்பரம் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.

அதிமுக என்ற இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவக்கினார். அம்மா அதை கட்டிக் காத்தார். அவர்கள் இருவரும் நமக்கு தெய்வங்கள். அதிமுக என்ற ஒரு இயக்கம் இருப்பதால்தான் திமுக என்கிற கட்சியை இயக்க முடியாமல் தடுத்து நிறுத்தி உள்ளோம். ஸ்டாலின் அவர்களும் உதயநிதி அவர்களும் செல்லும் இடமெல்லாம் திட்டமிட்டு அதிமுகவையும் என்னையும் பற்றி அவதூறாக பேசி வருகிறார். 2 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம் இந்த இயக்கம். உங்களில் ஒருவனாக இருப்பது எனக்கு பெருமை. நான் பொதுச் செயலாளராக இருப்பதைவிட ஒரு தொண்டராக இருப்பதிலேயே பெருமை கொள்கிறேன். தலைவன் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். தொண்டன்தான் நிரந்தரமாக இருப்பான்.

அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்ததால்தான் இன்றைக்கு இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. நான் படிப்படியாக உயர்ந்துதான் இந்த நிலைக்கு வந்தேன். ஒரு தொண்டன் பொதுச் செயலாளராக முடியும். ஒரு கிளை செயலாளர் தமிழ்நாடு முதல்வராக முடியும் என்று சொல்வது நம் இயக்கத்தில். தான் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் எப்போது திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என கூறுகிறார். இந்த 3 ஆண்டுகளில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன திட்டங்களை செய்தோம் என நான் பட்டியலிடுகிறேன். அதுபோல் உங்களால் பட்டியலிட முடியுமா? திமுகவின் சரித்திரம் இதோடு முடியப்போகிறது.

உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த பார்க்கிறார்கள். இது என்ன மன்னர் பரம்பரையா? ஜனநாயக நாடு? நீங்கள் உங்கள் கட்சியில் எல்லோரையும் அடிமையாக வைத்துள்ளீர்கள். அங்கே யாருமே தலைமை பதவிக்கு வர முடியாது. திமுகவின் அடுத்த தலைமை நான்தான் என யாராவது ஒருவர் கூறினால் அடுத்த நிமிடமே அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் அதிமுக அப்படியல்ல. இது ஜனநாயக கட்சி.

10 ஆண்டு அதிமுக சிறப்பாக ஆட்சி புரிந்தது. அதற்கு முந்தைய திமுக ஆட்சியில்தான் தமிழகம் இருண்டு கிடந்தது. மின்வெட்டால் இருண்டு கிடந்தது. அப்போது புரட்சித்தலைவி ஜெயலலிதா, நான் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை சீரமைப்பேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்து, உடனடியாக மின் தட்டுப்பாட்டையும் சீரமைத்து தடையற்ற மின்சாரம் வழங்கினார். இந்தியாவில் அதிக தார் சாலை உள்ள மாநிலமாக தமிழ்நாடு காட்சியளிக்கிறது. இதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் 2,138 பேர் கஞ்சா விற்றதாகவும் அதில் 148 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது. அப்படி என்றால் மீதி உள்ளவர்களை ஏன் கைது செய்யவில்லை. அவர்கள் திமுகவினரா? சைலேந்திரபாபு என்று டிஜிபி ஒருவர் இருந்தார். அவர் கஞ்சா ஆப்பரேஷன் 2.0, 3.0 என்றெல்லாம் சொன்னார். ஆனால் ரிட்டையர்டு ஆகி ஓடி விட்டார். இதுதான் இந்த அரசின் லட்சனம்.

முதியவர்கள் தனியாக வசிக்கும் இடங்களில் திட்டமிட்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. விலைவாசி உயர்ந்து விட்டது. அரிசி ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் ஏறிவிட்டது. மக்கள் துன்பப்படுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் நீங்கள் நலமா என்று கேட்கிறார். எப்படி நலமாக இருக்க முடியும். நாட்டை பற்றி சிந்திக்காதவர் தமிழக முதலமைச்சர். பிஜேபியுடன் கள்ள உறவு என்கிறார்கள். அது உங்களுக்குதான் கைவந்த கலை. எங்களுக்கு அப்படியெல்லாம் இல்லை. அந்த சூழலும் இல்லை. எதற்கும் அஞ்சாத தொண்டர் கூட்டம் எங்களிடம் உள்ளது. திட்டமிட்டு தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். இனி அவர்கள் தமிழகத்திற்கு ஏதாவது பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் கண்டிப்பாக எதிர்ப்போம். ஆனால் நீங்கள்தான் கோ பேக் மோடி என்றீர்கள். தற்போது ஆட்சிக்கு வந்ததும் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறீர்கள். பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதிமுக என்பது 50 ஆண்டு கால இயக்கம். கட்சிக்காக நான் உழைத்திருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்கிறோம். தமிழ்நாட்டில் அதிக தொண்டர்கள் இருக்கும் கட்சி அதிமுகதான். 2024க்கு பிறகு அதிமுகவே இருக்காது என்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்து பாரதிய ஜனதா கட்சியின் சின்னத்தை தமிழகத்தில் 1998 ஆம் ஆண்டு ஆம் அடையாளப்படுத்தியதே அதிமுக என்கிற கட்சிதான்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில்தான் என்எல்சி நிறுவனம் பங்குகளை விற்றபோது அதை தமிழக அரசே பங்குகளை வாங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிலத்தை எடுக்க விடாமல் தடுத்தோம். ஆனால் தற்போது விவசாயிகள் நிலம் பறிக்கப்படுகிறது. மூன்றாவது சுரங்கம் அனுமதிக்க கூடாது எனக்கூறி சட்டப்பேரவையில் எம்எல்ஏ அருண்மொழித்தேவன் குரல் கொடுத்தா.ர் அதிமுக ஆட்சியில்தான் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பல்வேறு தொழிற்சாலைகள் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவை இங்கு வரவில்லை. ஆனால் இந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டது ஸ்டாலின்தான்.

சேத்தியாத்தோப்பில் உள்ள சர்க்கரை ஆலை சரிவர செயல்படவில்லை. வேளாண்துறை அமைச்சராக இருக்கின்ற இந்த மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டிய கரும்புகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்கிறது. கரும்பு அரவை திறனும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் தாரை வார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் விவசாயிகளை மயக்கி கவர்ச்சியாக பேசி கரும்புக்கு ஆதார விலையை உயர்த்தி தருவோம் என கூறினார்கள். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே செய்யவில்லை.

புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக சார்பில் ஏராளமான நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், தடுப்புச் சுவர்கள் என பல கட்டுமான பணிகள் நடைபெற்று இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் காட்டுமன்னார்கோயிலில் எல். இளையபெருமாளின் மணி மண்டபம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி அல்ல. திமுகவின் இந்த 3 ஆண்டு கால ஆட்சிதான் இருண்ட ஆட்சி. தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க இந்த தொகுதியில் சந்திரகாசன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

திமுக கூட்டணி கட்சிகளுடன் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது

நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்