in

செங்காடு ஊராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு ; கிராம மக்கள் அவதி அடைவதாக புகார்.

செங்காடு ஊராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு ; கிராம மக்கள் அவதி அடைவதாக புகார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்காடு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆழ்துளை கிணறு மோட்டார் இணைப்பில் இருந்து, மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த ஒரு வார காலமாக 6 ஆவது வார்டில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக ஊராட்சி நிர்வாகம் டிராக்டர்கள் மூலம் விநியோகிக்கும் தண்ணீரும் போதுமானதாக இல்லை என மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் முன்பு பிளாஸ்டிக் பேரல்களை வைத்து தண்ணீருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். குடிநீர் தேவைக்கு மட்டும் அருகில் உள்ள தெருகளுக்கு செல்லும் பெண்கள், பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து தலை மற்றும் இடுப்பில் சுமந்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாக மக்கள் கூறுகின்றனர். குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதை தடுக்க குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைத்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு ; சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது, விரைவில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

What do you think?

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

சோழியக்குடியில் ஏழையின் குடிசைக்குத் தீ வைப்பு: ஆவணங்கள் எரிந்து சாம்பல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு