தீர்த்தத்தொட்டி ஆறுமுக நயினார் திருக்கோயில் குடமுழுக்கு விழா
உலக பிரசித்தி பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த தீர்த்தத்தொட்டி ஆறுமுக நயினார் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான தீர்த்தத்தொட்டி ஸ்ரீ ஆறுமுக நயினார் திருக்கோயில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
உபயதாரர்கள் முருகப்பா குழும்பத்தின் பங்களிப்புடன் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க அரோகரா முழக்கம் விண்ணை முட்ட மூலவர் சன்னதி மற்றும் ராஜ கோபு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புனித நீர் மின் மோட்டார்கள் மூலம் தெளிக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேகத்தில் முருகப்பா குழுமத்தினர் ஐந்து வகையான அறுசுவை உணவுகளை படைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


