in

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்


Watch – YouTube Click

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

 

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில், வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஐராவதம் யானையே மலையாக நின்று பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம் நிலவுவதால், இத்தலம் “அத்திகிரி” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 7-ஆம் நாளான இன்று, முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மேளதாளங்கள் முழங்க கோவிலிலிருந்து புறப்பட்டு, காந்தி சாலையில் தேரடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

சுமார் 100 டன் எடையும், 76 அடி உயரமும், ஐந்து நிலைகளும் கொண்ட திருத்தேரில், கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

“கோவிந்தா… கோவிந்தா…”, “அத்தி வரதா…” என்ற பக்தி முழக்கங்கள் விண்ணை முட்ட, மேளதாளங்கள் மற்றும் தாரை தப்பட்டை இசையுடன் தேரோட்டம் பக்தி பரவசத்தில் நடைபெற்றது.

காந்தி சாலை தேரடியில் இருந்து புறப்பட்ட திருத்தேர், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், சங்கர மடம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தேரடி பகுதியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் நீர்மோர், பானங்கள், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களும் அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

மேலும், விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரின் எல்லைப் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டதுடன், நகருக்குள் வாகனங்கள் செல்லாத வகையில் போக்குவரத்து மாற்றங்களும் அமல்படுத்தப்பட்டன.

இதனிடையே, மேற்கு மாநகரக் முன்னாள் கழக செயலாளர் எம் பி ஸ்டாலின் அலுவலகத்தில் பக்த கோடிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கோவிந்தா முழக்கங்களால் அதிர்ந்த காஞ்சிபுரம் நகரம். பக்தி வெள்ளத்தில் மிதந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரதராஜ பெருமாள் தேரோட்டம்… பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

What do you think?

நாமக்கல் பரளி அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலய வைகாசி திருவிழா சிங்க வாகனத்தில் திருவீதி உலா கண்ட செல்லாண்டியம்மன்

திடீர் ரைடில் ஈடுபட்ட அதிரடி காட்டும் எஸ் பி….