அக்னி வசந்த விழா துரியோதனன் படுகளம்
செஞ்சி அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெகனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கிய அக்னி வசந்த விழாவில், தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும், பாரத சொற்பொழிவுகள், இரவு நேரங்களில் மகாபாரதத்தை மையமாகக் கொண்ட தெருக்கூத்து நாடகங்கள், முத்துப்பல்லக்கு, பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் உபயதாரர்கள் ஏற்பாட்டில் சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மகாபாரதத்தில் இடம்பெறும் பாஞ்சாலி சபதம் மற்றும் துரியோதனனை வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன.
துரியோதனன் படுகளம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திரௌபதி அம்மனுக்கு சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு, பூ முடிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதனை காண நெகனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
அப்போது பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷங்களை எழுப்பி, அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திருவிழா களைகட்டியது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து செய்திருந்தனர்.

