ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
தேனியில் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர்.

தேனி அருகே சொக்கத்தேவன் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் குடமுழக்கு விழாவிற்காக கோயில் திருப்பணிகள் நடைபெற்ற வந்ததை அடுத்து இன்று கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கோயிலுக்கு எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு அதில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது, பின் வேத மந்திரங்கள் முழங்க பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் வளர்த்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கலச நீரை தலையில் சுமந்து கொண்டு மேளம் நாதஸ்வரம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது, கலச நீருடன் கோயில் வளாகத்தை சுற்றி வந்து விமான கலசங்களை அடைந்தனர்.

பின் கோபுர கலசங்களுக்கும், பரிவார தெய்வங்களின் கலசங்களுக்கும் புனித கலச நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது, கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் மீது புனித கலச தெளிக்கப்பட்டது.
பின்னர் கோயில் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு புனித கலச நீரால் அபிஷேகம் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது, இதில் சொக்கதேவன் பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


