திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
செஞ்சி அருகே செத்தவரையில் ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ வீரனார் சுவாமி மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செத்தவரை கிராமத்தில், கோட்டைக்கரை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ வீரனார் சுவாமி திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமையான இத்திருத்தலத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ வீரனார் சுவாமிகள், செத்தவரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்பட்டு வருகின்றனர்.
கோட்டைக்கரை மலைப்பகுதியை அரணாகவும், எல்லையாகவும் கொண்டு மக்களைக் காக்கும் தெய்வமாக நம்பப்படுவதால், ஸ்ரீ முனீஸ்வரன் சுவாமி “கோட்டைக்கரை முனீஸ்வரன்” என்றும், ஸ்ரீ வீரனார் சுவாமி “கோட்டை வீரன்” என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகின்றனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி அதிகாலை மங்கல இசையுடன் திருவிளக்கு வழிபாடு, கோ பூஜை மற்றும் புனித நீர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து ஐங்கரப் பெருமான் வேள்வி, ஆனை பெறுதல், மண்எடுத்தல், முளைப்பாரி இடுதல், காப்பு அணிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மூலவர் முனீஸ்வரன் சுவாமிக்கு பல்வேறு மூலிகைப் பொருட்களுடன் சிறப்பு வேள்வி மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை யாகசாலையில் ஸ்ரீ கணபதி பூஜை, கோ பூஜை, மூலமந்திர ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோவில் விமான கலசங்களின் மீது ஊற்றப்பட்டு, அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ வீரனார் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செத்தவரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் தீர்த்தமலை மற்றும் செத்தவரை கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


