கிருஷ்ணாபுரம் கலை விநாயகர் கோவில் முதல் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகரில் அமைந்துள்ள கலை விநாயகர் கோவிலில் முதல் வருஷாபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோவிலில், விழாவையொட்டி ஆவணி மாதம் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாவாசனம், பஞ்சவாத்யம், கும்பபூஜை, வேத பாராயணம், அக்னிகாரியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு விமான அபிஷேகம் மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முதல் வருஷாபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கலை விநாயகரை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

