சுங்குவார்சத்திரம் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுப்பு – பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதி
சுங்குவார்சத்திரம்: சுங்குவார்சத்திரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மாம்பாக்கம் சிப்காட் எதிரே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் தற்காலிகமாக குறுகலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கத்தை விட வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் பெய்த மழையின் காரணமாக தற்காலிக சாலைகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் சேதம் காரணமாக வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.
இந்த போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வாகன ஓட்டிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
எனவே, சம்பவ இடத்தில் போக்குவரத்து போலீசாரை கூடுதலாக பணியில் ஈடுபடுத்தி, வாகன நெரிசலை சீர்செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலையை முறையாக சீரமைத்து, வாகனங்கள் தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


