வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு
புதுச்சேரி…பரீட்சார்த்த முறையில் நவீன எந்திரம் மூலம் வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி..அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆய்வு…
புதுவையில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் உட்பட கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்படுகிறது.
இவற்றை அகற்றுவதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மழை காலத்தில் இந்த கழிவுகளின் அடைப்பால் வாய்க்கால்களில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் வெள்ளம் தேங்குகிறது. மழை நின்றும் பல மணி நேரத்துக்கு பின்னரே வெள்ளநீர் வடிகிறது.
இந்த நிலையில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற நவீன எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தின் செயல்பாடுகளை சோதனை செய்து பார்க்க அரசு முடிவு செய்தது. இதன்படி உப்பளம் தொகுதியில் துறைமுக நுழைவு வாயில் அருகே
இந்த எந்திரம் மூலம் வாய்க்கால் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,
கழிவுநீர் அடைப்புகளை மனிதர்கள் மூலம் அகற்றக்கூடாது என சுப்ரீம்கோர்ட் உத்தரவு உள்ளது. இதனால் நவீன எந்திரத்தை பயன்படுத்தி அடைப்புகளை அகற்ற அரசு முடிவு செய்தது.
இந்த எந்திரத்தை வாங்கும் முன்பு பரீட்சார்த்த முறையில் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிவு செய்தோம். பரிசோதனைக்கு பின்னர் புதுவை மாநிலத்துக்கு எத்தனை எந்திரங்கள் வாங்கலாம் என முடிவு செய்யலாம் என முதல்அமைச்சர், அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்துள்ளோம்.
மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தேவையான எந்திரங்கள் வாங்கப்படும். மழைக்காலத்துக்கு முன்பு புதுவையில் உள்ள வடிகால் வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக நகர பகுதி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. புதுவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் திட்ட வரையறை தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்ட வரையறையுடன் செப்டம்பர் முதல் வாரத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சர், பிரதமரை சந்தித்து தேவையான நிதி பெற்று திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் குடிநீர் திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்படும் என கூறினார்.


