போரூரில் வாகன ஓட்டியிடம் போக்குவரத்து போலீசார் வாக்குவாதம்; வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு
சென்னை: போரூர் மேம்பாலம் அருகே எச்சரிக்கைப் பலகை மற்றும் தடுப்புகள் அமைக்காமல் சாலையில் வெள்ளைக் கோடு வரையும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாருக்கும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள சிக்னல் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் வெள்ளைக் கோடு வரையும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பணி நடைபெறும் இடத்தில் உரிய தடுப்புகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய வாகன ஓட்டி ஒருவர், சாலையில் கோடு வரையும் பணி நடைபெறுவது தெரியாமல் அந்தப் பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகன ஓட்டியிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், அவரது வாகனத்தை புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாகன ஓட்டி, போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


