in

வெட்டவெளியில் வீணாகும் நெல் மூட்டைகள்

வெட்டவெளியில் வீணாகும் நெல் மூட்டைகள்

 

கும்பகோணம் அருகே வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் வீணாகும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள்… குடோன்களை ஆக்கிரமித்துள்ள 18 லட்சம் பழைய சாக்குகள்!

திருநாகேஸ்வரம்: பல லட்சம் டன் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க குடோன்கள் இல்லை எனக் கூறி திறந்த வெளியில் வெயிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் வீணாகும் அவலம் நடக்கும் நிலையில், அரசுக்கு சொந்தமான அரவை மில்லில் 4200 டன் நெல் மூட்டைகளை அடுக்கும் குடோனில் 18 லட்சம் வீணான பழைய சாக்குகள் பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தாமல் குவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எம்.ஆர்.எம் (MRM) மில் இயங்கி வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் இங்கு கொண்டு வரப்பட்டு அரவைக்கு பின் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்க 5000 டன் கொள்ளளவு கொண்ட 6 அதிநவீன குடோன்கள் உள்ளன. ஆனாலும் மில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெட்டவெளியில் வைக்கப்பட்டு பாழாகி வருகின்றன.

“குடோன்கள் நிரம்பிவிட்டன” என காரணம் கூறி, கொள்முதல் நிலையங்களில் இருந்து மில்லுக்கு நெல் மூட்டைகளை கொண்டு வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் பல லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி, மழையில் நனைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெல் மூட்டைகளை அடுக்க இடமில்லை என அதிகாரிகள் கூறுவது பொய் எனவும், உண்மையில் குடோன்களுக்குள் பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்படாத 18 லட்சம் வீணான பழைய சாக்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து எம்.ஆர்.எம் மில்லுக்குள் செய்தி சேகரிக்க சென்றபோது அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். எனினும் பணியாளர்கள் உதவியுடன் குடோனுக்குள் வீணான சாக்குகள் மலைபோல குவிக்கப்பட்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த அவலம் திருநாகேஸ்வரம் மட்டுமல்லாமல் இரும்புத்தலை மற்றும் ஆர்சுத்திப்பட்டு நெல் சேமிப்பு கிடங்குகளிலும் நடக்கிறது. அங்கும் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட குடோன்களில் பழைய சாக்குகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. வெங்கட்ராமன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் “கிடங்குகளில் உள்ள வீணான சாக்குகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்” என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமைச்சரின் உத்தரவையும் மீறி கீழ்மட்ட அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தால் விவசாயிகளின் உழைப்பும், பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதல்நிலை மேலாளரிடம் கேட்டபோது, “ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என வழக்கமான பதிலை அளித்தார்.

What do you think?

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனி மாத கிருத்திகை ஊஞ்சல் உற்சவம்