அம்பாள் கோவில் ஸ்கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்!
ஓசூர் முல்லை நகர் ஸ்ரீ காயத்ரி அம்பாள் கோவிலில் ஸ்கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர், இராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காயத்ரி அம்பாள் திருக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஸ்கந்த சஷ்டி மற்றும் திருக்கல்யாண மகோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, ஸ்கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதற்கட்டமாக ஹோமம் வளர்க்கப்பட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பிலும் பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு முருகப்பெருமானின் திருவருள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி கமிட்டி தலைவர் சங்கர், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சக்திவேல், மற்றும் கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


