திருவாடானையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியம்: வீணாகும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதி!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில், பழைய அஞ்சல் அலுவலகம் எதிரே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பெருமளவில் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
கடந்த பல நாட்களாகக் குடிநீர் உடைந்து ஓடிக்கொண்டிருந்தும், அதனைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு வீணாக வெளியேறும் குடிநீர், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக தலையிட்டு, இந்த குழாய் உடைப்பைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தின் இத்தகைய அலட்சியப்போக்கால், திருவாடானை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரியூர், வெள்ளையபுரம், திருவெற்றியூர், பாரதி நகர், மங்களக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல மாதங்களாகக் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.


