மின்னல் வேகத்தில் கணிதம்: 3 வயது குழந்தைகளின் அசத்தலான சாதனை
பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 வயது முதற்கொண்ட குழந்தைகள், வெறும் 1 நிமிடத்தில் 50-க்கும் மேற்பட்ட வரிசைகளைக் கொண்ட கணிதக் கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகளைத் துல்லியமாகச் செய்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், உலகப் புகழ்பெற்ற இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Indian Book of Records) சாதனைக்கான போட்டியில் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற 3 வயது முதற்கொண்ட பச்சிளம் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், கணிதப் பாடத்தில் தங்களது வேகத்தையும், துல்லியமான திறமையையும் நிரூபித்துக் காட்டினர்.
குறிப்பாக, வெறும் 1 நிமிட கால அவகாசத்திற்குள், 25 வரிசைகளுக்கும் மேலாக, அதாவது 50 பிளஸ் ரோஸ் (50+ Rows) கொண்ட கடினமான கணிதக் கூட்டல் (Addition), கழித்தல் (Subtraction) மற்றும் பெருக்கல் (Multiplication) கணக்குகளை மின்னல் வேகத்தில் துல்லியமாகச் செய்து முடித்துச் சாதனை படைத்தனர்.

3 வயது முதலே இதற்கான தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு, இந்த அசாத்திய திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடுவர்கள் ஆய்வு செய்து, அவர்களது சாதனையை அங்கீகரித்துப் பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
இதுகுறித்துச் சாதனை படைத்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், எங்கள் குழந்தைகள் 3 வயதிலிருந்தே இந்த அளவிற்குக் கடின உழைப்பைச் செலுத்தி, இன்று உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது எங்களுக்குப் பேரானந்தத்தை அளிக்கிறது.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு எங்களது குழந்தைகளின் தனித்துவமான (Uniqueness) திறமையை உலகிற்கு அடையாளம் காட்டி, இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கியதற்குப் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதி பெற்றோர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


