கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா
கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா 2-ம் நாள் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஜுலை 31- அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பக்தி பரவசத்துடன் நடைபெற உள்ளது.
திருவிழாவின் – 2ம் நாள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோவில் சுற்றி வந்து மேல தாளத்துடன் பக்தர்களுக்கு திருக்காட்சி சென்றார் அப்போது தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், பிரசாத விநியோகம், மாலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி 18 பெருக்கு நாளான ஆகஸ்ட் 3-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்திரசேகரர் அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சோமஸ்கந்தர் பல்லக்கில் வீதியுலா வந்து, ஆகாய கங்கை தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், மாலை வசந்த உற்சவ அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்தில் பவனி வருவதும், தொடர்ந்து மாலை 3 மணிக்கு நடராஜர் சிவகாமி சமேதராய் பல்லக்கில் வீதியுலா, வசந்த உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
இந்த விழாவில் கொல்லிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருவதுடன், விழா நாட்களில் மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அறப்பளீஸ்வரர் சுவாமியின் அருளைப் பெறுமாறு, திருக்கோயில் தக்காரும் உதவி ஆணையருமான இரா. இளையராஜா, செயல் அலுவலர் செ. சங்கர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


