ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்! பத்திரத்தை வழங்க மறுப்பதாகப் புகார்!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த நான்கு அண்ணன் தம்பிகள் தங்கள் தந்தையின் பெயரில் உள்ள சொந்த பூர்வீக சொத்தை தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
இந்த இடத்திற்கு முறையான நத்தம் பட்டா சிட்டா உள்ளது. தமிழக அரசின் நத்தம் பட்டா எண் 141ன் படி நத்தம் சர்வே எண் 459 வார்டு எண் 3ல் உள்ள இடத்திற்கு உரிய ஆவணங்கள், பட்டா நகல், சிட்டா, வரைபடம் என அனைத்து ஆவணங்களும் தங்களிடம் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் தந்தை இந்த ஊர் பொதுமக்களுக்காக கூட்டுறவு துறை கட்டிடம் கட்டுவதற்கு இடம் வழங்கியவர் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை சார் பதிவாளர் தர மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரில் உள்ள சில முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து இது எங்களுடைய பூர்வீக சொத்து என்று கூறி சார் பதிவாளரை மிரட்டி அந்த பத்திரத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சொத்தில் நான்கு அண்ணன் தம்பிகளில் யாராவது உரிமை கொண்டாடினால் அவர்களை அடியாள் வைத்து அடிப்பேன் என அரசியல்வாதிகள் மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக சார் பதிவாளர் 25 நாட்களுக்கு மேலாகியும் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணத்தை கொடுக்காமல் இன்று போய் நாளை வா என அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாளையங்கோட்டை கீழ்பாதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


