ஆதரவற்றோரின் முகத்தில் புன்னகையை வரவழைத்து நெகிழ்ச்சி
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளும் இனிப்புகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத சாலையோர ஆதரவற்றோரின் முகத்தில் புன்னகையை வரவழைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன். ஆதரவற்றோரை ஆட்டோவில் அழைத்துச் சென்று, துணிக்கடையில் அவர்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ள அந்த நெகிழ்ச்சியான தருணம்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு தினசரி உணவு வழங்குவது, சாலையோரம் தவிக்கும் ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு அளிப்பது எனப் பல்வேறு களப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலையோர ஆதரவற்றோருக்கும் புத்தாடை மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து நிதி திரட்டினார்.

பொதுமக்களின் பேராதரவோடு ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கிப் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகிறார், இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களைத் தேடிச் சென்ற பாரதி மோகன், அவர்களை அன்போடு ஆட்டோவில் ஏற்றி நேரடியாகத் துணிக்கடைக்கே அழைத்துச் சென்றார்.
பொதுவாக யாரோ கொடுத்த பழைய ஆடைகளையே அணிந்து பழகிய அந்த ஆதரவற்றவர்கள், தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தாங்களே தேர்வு செய்து மகிழ்ந்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.
பண்டிகை நாட்களில் ஆதரவற்றோரை ஒதுக்கி வைக்காமல், சொந்தக் குடும்பத்தைப் போல துணிக்கடைக்கே அழைத்துச் சென்று புத்தாடை வாங்கிக் கொடுத்த பாரதி மோகனின் இந்த மனிதாபிமான செயலை வைத்தீஸ்வரன் கோவில் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


