புதுச்சேரி தொழிலதிபரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் மோசடியில் ஈடுபட்ட, மூவரை புதுச்சேரி சைபர் க்ரைம்போலீசார் கைது செய்து
புதுச்சேரியை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், அறிமுகம் இல்லாத ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வியாபாரத்தில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, ஏபிகே லைப் லிங்க், வாட்ஸ்அப் குழு அழைப்பு இணைப்பை அனுப்பி, பணம் முதலீடு செய்ய தூண்டியுள்ளார். அதனை நம்பி தொழிலதிபரும், குழுவில் இணைந்து முதலீடு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் முதலீட்டுக்கு இருமடங்கு பணம் அளித்து ஆசை காட்டியுள்ளனர். அதன்பேரில் அந்த தொழிலதிபர் மொத்தமாக 1 கோடியே 27 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளார்.

மேலும் அவரது கணக்கில் லாபத்துடன் சேர்த்து அதிக தொகை காண்பித்துள்ளது. அதனை திரும்பப்பெற முயன்றபோது, அவரால் முடியவில்லை. மேலும் முதலீடு செய்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை தொழிலதிபர் உணர்ந்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த தொழிலதிபர் புகார் அளித்தார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்குடன் தொடர்புடைய ஒவ்வொரு வங்கி கணக்கையும் ஆய்வு செய்ததில், மோசடி மூலம் பெறப்பட்ட பணம் பல்வேறு வங்கி கணக்குகள் வழியாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதும், பல்வேறு முறைகள், பரிவர்த்தனை வழிகள் மூலம் அந்த தொகைகள் நகர்த்தப்பட்டு இருப்பதும், மோசடியில் தொடர்புடைய நபர்கள் நாமக்கல், திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மோசடி பணம் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட ஒரு நபரை பிடித்து விசாரித்ததில், திருப்பூரை சேர்ந்த தனது மச்சான் சதீஷ்குமார் (30) என்பவர், தனது வங்கிக் கணக்கை வாங்கி சென்றதாக கூறியுள்ளார். அதன்பேரில், சதீஷ்குமார் மற்றும் அவருடன் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், கமிஷன் தொகைக்காக வங்கிக் கணக்குகளை வாங்கி, நாமக்கல்லை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (33) என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதில் நவநீதகிருஷ்ணனும் கமிஷன் பேரில் மோசடியில் ஈடுபட்டதும், மோசடிக்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்ததையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த அவர், தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்ததும், மஞ்சள் காமாலை நோய் பாதித்ததால் வேலையை விட்டு நின்றுவிட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
அதன்பிறகு, விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளார். சதீஷ்குமார் ரியல் எஸ்டேட் புரோக்கராக செயல்பட்டதால் அதன் மூலமாக, நவநீதகிருஷ்ணனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மீது மேற்குவங்கம், நாகலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சைபர் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், பல மாநிலங்களில் அப்பாவி மக்களை குறி வைத்து ஆன்லைன் டிரேடிங் மோசடிகளில் ஈடுபட்டிருப்பதும்.
தெரிந்தது. அவர்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், பல்வேறு மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருப்பதும், இவற்றின் மூலம் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்து.
புதுச்சேரி அழைத்து வந்தனர். நவநீதகிருஷ்ணனிடம் இருந்து 2 லேப்டாப், 4 செல்போன், 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 3 சிம்கார்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


