in

மக்கள் ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல: தினகரன் பேச்சு


Watch – YouTube Click

மக்கள் ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல: தினகரன் பேச்சு

‘‘கொலை வழக்கிலும், மணல் கடத்தலிலும், நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர்களையும் நம்பி, மக்கள் ஏமாந்தால், நாங்கள் பொறுப்பல்ல,’’ என்று அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பேசினார்.

திருச்சி லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில், அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிடும் செந்தில்நாதனுக்கு ஆதரவு கேட்டு, அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.

திருச்சி, எடமலைப்பட்டி புதுாரில், அவர் பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி 3வது முறையாக வெற்றி பெறப் போகும் தேர்தல் இது. இந்த தேர்தலில், பழனிச்சாமி ஓட்டு கேட்டு வருகிறாரே அவரது பிரதமர் வேட்பாளர் யார் பழனிச்சாமியா? ஜெயக்குமராக இருக்கலாம். ராமநாதபுரம் தொகுதியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் பழனிச்சாமியின் வேட்பாளர் ஜெயப்பெருமாள், 1977 ல் எம்.ஜி.ஆர்., அருப்புக் கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் பாலுச்சாமியின் மகன்.

மதுரையில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம.சீனிவாசனை எதிர்த்து, பழனிச்சாமி கட்சியில் போட்டியிடும் டாக்டர் சரவணன், 2014ல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, இடைத்தேர்தல் வேட்பாளர் படிவத்தில் இருந்த கை ரேகையை, அவருடையது இல்லை என்றவர்.

நெல்லையில் வேட்பாளராக நிறுத்திய சிம்லா முத்துச் சோழனை மாற்றி வேறு வேட்பாளரை நிறுத்தினார். அ.தி.மு.க.,வின் நிலை இப்படித்தான் இருக்கிறது. ஜெயலலிதாவின் சின்னம் அங்கு இருப்பதாக நினைப்பவர்கள், இந்த தேர்தலோடு அதற்கு முடிவுரை எழுதுவார்கள்.

எங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக, நானும், பன்னீர் செல்வமும் இணைந்திருக்கவில்லை. நான் நினைத்திருந்தால், ஜெயலலிதா இருந்த போதே ஒரு பதவியை வாங்கியிருக்க முடியும். மூன்று முறை முதல்வராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த பன்னீர்செல்வமும் பதவி வேண்டும் என்ற ஆர்வத்தில் இல்லை.

துரோகிகளிடம் இருக்கும் கட்சியையும், சின்னத்தையும் மீட்டு, தொண்டர்களிடம் கொடுக்க வேண்டும், என்பதற்காக இணைந்திருக்கிறோம். ஜெயலலிதா பெயரை சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பழனிச்சாமி கொலை வழக்கிலும், மணல் கடத்தலிலும் தொடர்புடையவர்களை வேட்பாளராக்கி இருக்கிறார். அதே போல், நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர்களையும், மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களிடம் மக்கள் ஏமாந்தால், நாங்கள் பொறுப்பல்ல.

தமிழகத்தில் தப்பித் தவறி, தெரியாமல் தி.மு.க.,வை ஆட்சியில் வைத்து விட்டீர்கள். ஆனால், மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொடுக்கவில்லை.
மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்துக்கான திட்டங்களை பெற்றுத்தர, படித்த, மணல் கடத்தாத, மக்கள் சொத்துக்களை அபகரிக்காத அ.ம.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி

சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் – அபிஷேக் டோமர் நடவடிக்கை