முறையான திட்டமிடுதல் இல்லாததால் தள்ளுமுள்ளு..
முறையான திட்டமிடுதல் இல்லாததால் பிரசாதப்பை வழங்கும் இடத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு…..
அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றபோது தூய்மை பணியாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் இருவர் மயக்கம்…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது.
அனுதினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்தனர். திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கடந்த பத்து நாட்களும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.
கடந்த 24ம் தேதி மகா தீப நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் வளாகம் மற்றும் 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை இன்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் பிரத்தியேகமாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உடன் தூய்மை பணியாளர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பிரசாதங்கள் அடங்கிய பல் தொகுப்பை வழங்கினார்.
அப்போது பிரசாதப்பை வாங்கும் இடத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் வைத்திருந்த பிரசாத பைகளை அனைத்து தூய்மை பணியாளர்களும் தாங்களாகவே சென்று முண்டியடித்து எடுத்துச் சென்றனர்.
இதனால் அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் இரண்டு தூய்மை பணியாளர்கள் மயக்கம் அடைந்து அண்ணாமலையார் கோவிலில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


