ஓசூர் அரசு மருத்துவமனையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதார முகாம்!
ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஸ்வச் பாரத் வார விழாவை முன்னிட்டு சிறப்புச் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லட்சுமி ஸ்ரீ தலைமை தாங்கினார். மருத்துவர் சோபியா மற்றும் தலைமைச் செவிலியர் கண்காணிப்பாளர் முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மருத்துவமனைக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்குப் பல்வேறு நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவும் விதங்கள் குறித்தும், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் முறைகள் மற்றும் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் மேலும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க குடிநீரை நன்கு காய்ச்சிப் பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஓசூர் அரசு மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தினமும் இலவசமாக கசாயம் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் மற்றும் மனித உடலுக்கு வரும் நோய் ஆபத்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனை நிர்வாகத்தினர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


