வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 கலச அபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோயில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, நட்சத்திர முறைப்படி கடந்த வாரம் இத்திருக்கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி மாதம் 23-ஆம் தேதி இன்று வருவதால், தமிழ் ஆண்டு கணக்குப்படி அன்றைய தினம் ஓராண்டு நிறைவு உற்சவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு சத்ரு சம்ஹார யாக பூஜை நடைபெற்றது. மாலையில் 1008 கலசங்கள் நிறுவப்பட்டு முதல் கால யாக பூஜையும், இன்று காலையில் இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலையில் திருக்கல்யாண உற்சவமும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலாவும் நடைபெற உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான புத்தர்கள் சாமி தரிசனம் செய்து முருகப்பெருமானை வழிபட்டு வணங்கி வருகின்றனர். கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு உற்சவ ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


