திருவிடைமருதூர்: பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தூக்கு கயிறுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
திருவிடைமருதூர்:_ கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தூக்கு கயிறு மாட்டியவாறு நூதன முறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமையில் திருவிடைமருதூர் காந்தி சிலையில் இருந்து விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். தாலுக்கா அலுவலகம் முன்பு காவல்துறையினர் தடுப்பு அரண்கள் வைத்து ஏராளமான போலீசாரை குவித்திருந்தனர்.
போராட்டத்தில் விவசாயிகளை கேவலப்படுத்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை வன்மையாக கண்டித்தனர். உரவிலை உயர்வு மற்றும் உரத் தட்டுப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி ஐந்து ஏக்கர் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், திருவிடைமருதூர் தாலுக்காவில் மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும், டெல்டா பகுதிகளில் நெல் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


