திரையரங்கம், தொழிற்சாலைகளுக்கு ரூ.11,500 அபராதம் சுகாதாரத்துறை அதிரடி
நாகப்பட்டினத்தில் கொசுப்புழு உற்பத்தி: திரையரங்கம், தொழிற்சாலைகளுக்கு ரூ.11,500 அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை.
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில், நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 36 தோணித்துறை சாலையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுகாதாரத் துறையினர் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் சுகாதார அலுவலக சுகாதார ஆய்வாளர் மணிமாறன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகாமுனி மற்றும் நகராட்சி களப்பணி உதவியாளர் செல்வம் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின்போது பாண்டியன் திரையரங்க வளாகத்தில் தேங்கியிருந்த நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ் திரையரங்க நிர்வாகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த நலக்கல்வியும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ஆண்டவர் ஐஸ் பிளான்ட் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 18 பழைய டயர்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் பெருமளவில் காணப்பட்டதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அன்னை மாதா இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதால் ரூ.1,000 அபராதமும், பெருமாள் லேத் பட்டறையில் கொசுப்புழுக்கள் உருவானது உறுதியானதால் ரூ.500 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
மேற்கண்ட இடங்களில் ஏற்கனவே பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் இன்று ஒரே நாளில் நான்கு இடங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.11,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது வளாகங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


