ஓசூர் அழகன் முருகன் கோவிலில் ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ அழகன் முருகன் திருக்கோவிலில், ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் தங்களது நட்சத்திரம் மற்றும் பெயர்களைக் கூறி அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, குடும்ப நலன், ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் வளம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


