நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – 9-ம் நாள் செப்பு தேரில் எழுந்தருளிய காந்திமதி அம்பாள்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெறும் திருவிழாக்களைப் போலவே காந்திமதி அம்பாளுக்கும் தனியாக கொடியேற்றத்துடன் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
விழாவையொட்டி தினமும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் செப்பு தேரில் எழுந்தருளிய அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். நெல்லையப்பர் கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் செப்பு தேர் வலம் வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காந்திமதி அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.


