ஓசூர் பள்ளி மாணவி புதிய சாதனை!
தேசிய தடகளப் போட்டியில் ஓசூர் பள்ளி மாணவி மானசி புதிய சாதனை! 200 மீட்டர் ஓட்டத்தில் 14 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து அசத்தல்!
சாதனை படைத்த மாணவிக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு! 2030 ஆசியப் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என மாணவி மானசி பேட்டி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி மானசி, தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளார். சாதனை படைத்துத் திரும்பிய மாணவிக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில், சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் இம்மாதம் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்றன.
நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி மானசி கலந்து கொண்டார்.
இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாணவி மானசி, பந்தயத் தூரத்தை வெறும் 25.12 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம், கடந்த 2012-ஆம் ஆண்டு 25.61 வினாடிகளில் கடந்து நிகழ்த்தப்பட்டிருந்த முந்தைய சாதனையை முறியடித்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
தேசிய அளவில் ஓசூருக்குப் பெருமை சேர்த்துத் திரும்பிய சாதனை மாணவி மானசிக்கு, அத்வைத் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் பிரம்மாண்டப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பள்ளியின் நிறுவனர் அஸ்வத் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவி மானசிக்கு வெற்றிப் பதக்கம், மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவியின் இந்த இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஓட்டப்பந்தயப் பயிற்சியாளர் சேகருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்று கரவொலி எழுப்பித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாதனை மாணவி மானசி, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய அளவிலான தடகளப் போட்டிகளில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று நாட்டிற்காகத் தங்கப் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு எனத் தெரிவித்தார்.

