சிதம்பரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட முடிவு! 🚆 பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து சிதம்பரம் வழியாக அயோத்தி செல்லும் சாரதா சேது எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கடந்த மாதம் ரயில் மறியல் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் கால அவகாசம் அளித்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிதம்பரம் ரயில் பயணிகள் நலச்சங்கம், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.
ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் அப்துல் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வர்த்தகர் சங்கம், குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். இதுபோல காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிககளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவருமான தமிமுன் அன்சாரி தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும், 500க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்பது எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

