திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் சின்ன சேஷ வாகனம்
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் காலை சின்ன சேஷ வாகன புறப்பாடு.
திருமலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் சின்ன சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று துவங்கி நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை சின்ன சேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
சின்னசேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்கத்தால் செய்யப்பட்ட சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே காலை 8 மணிக்கு துவங்கி பத்து மணி வரை திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் சின்ன சேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.

அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.
வாகன புறப்பாடு ஊர்வலத்தில் நடைபெற்ற பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள், பக்தி கோஷம், ஜீயர் கோஷ்டியின் திவ்ய பிரபந்த கானம், வேத பண்டிதர்களின் வேத மந்திரம், யானைகள், காளைகள், குதிரைகள் ஆகியவற்றின் அணிவகுப்பு ஆகியவை திருப்பதி மலையில் கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தளிப்பதாக இருந்தது.