in

பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்! 3 இளைஞர்கள் கைது!

🚨 பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்! 3 இளைஞர்கள் கைது!

ஒடிசாவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 இளைஞர்களை கைது செய்தனர்.

நடப்பாண்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 545 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 269 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 21 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற மூன்று இளைஞர்களைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், இக்கடத்தலில் தொடர்புடைய மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.

பழனி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி மில் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகப் பைகளுடன் நின்றிருந்த மூன்று இளைஞர்களைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பைகளைச் சோதனையிட்டபோது, அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சாமிநாதபுரத்தைச் சேர்ந்த ஹில்சன் (19), பழனி வி.கே. மில் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் (19) மற்றும் ஜான்சன் (23) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தல்!
கைது செய்யப்பட்ட மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஒடிசா மாநிலம் முனிகுடா பகுதிக்குச் சென்று கஞ்சாவை வாங்கி, ரயில் மூலம் பழனிக்குக் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்தக் கஞ்சாவைப் பழனியில் விற்பனை செய்வதுடன், திண்டுக்கல்லைச் சேர்ந்த மேலும் மூன்று நபர்களுக்கும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த மேலும் மூன்று நபர்களைப் பிடிக்கத் தனிப்படை மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
367 வழக்குகள்; 545 பேர் கைது!
இதுகுறித்து, பழனி தாலுகா காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேரடியாகப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை கஞ்சா விற்பனை தொடர்பாக 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 545 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மொத்தம் 269 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கத் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!